ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

விடியாத விடியல்


வயதோ ஆறு
அவர்களின்
வாழ்க்கையோ தாறுமாறு !

பாடசாலைக்குச் செல்லும் வயதில்
தொழிற்சாலைக்குச் செல்லுகின்றனர்!

பால்மனம் மாறவில்லை
படிப்பறிவும் கொடுக்கவில்லை
புத்தகம் தூக்கும் கைகளில்
பாரத்தைச் சுமக்கிறார்கள் - குடும்பப்
பாரத்தைச் சுமக்கிறார்கள்!


இவர்கள் மட்டுமல்ல..
ஆத்தாளும் அப்படித்தான்
அப்பனும் அப்படித்தான்
பரம்பரையாய் வந்த வழக்கம்
…….. மாற்றமுடியவில்லை!


கல்விக்குத் தடை விதித்து
விடியாத விடியலை நோக்கி
வெற்று நடை போடுகிறார்கள்!

இனிய தோழனே!....



பெண்ணியம் பேசும்
உன்னைக் கூட
‘ஆண் தானே’
அப்படித்தான் இருப்பாய்
என்றிருந்தேன்!

விவகாரமாய்க்
கருதும் எனக்கு
நீ…
வித்தியாசமானவன்
என்பது
விளங்கவில்லை!

நட்பித்த நாள் முதல்
உன்னிடம் ஆளுமையில்லை
அடக்கமுறையில்லை!

என்னை அடிக்கடி
மெய்சிலிர்க்க வைத்தாய்
உந்தன் ஆழமான
சிந்தனையால்!

பிறகுதான்
எனக்கு உரைத்தது
நீ ஆணல்ல
நான் பெண்ணல்ல
நாம் மனிதர்களென்று !

பிறகென்ன சொல்ல…



ஒரு நிமிடம் முடிவதற்குள்
மனதிற்குள்
ஓராயிரம் சிந்தனைகள்
பெண்ணாய் இருந்துவிட்டால்
ஒன்று
கருக்கலைப்பு…..
இல்லையேல்
கள்ளிப்பால் !

ஆட்டிற்கு இல்லை
மாட்டிற்கு இல்லை – ஏன்
பத்து குட்டிகளைப்
பாசமாய் ஈனும்
பன்றிக்கு இல்லை
இந்த ஈனப்புத்தி
அய்ந்திற்குப் பாசம் (அறிவு)
ஆறிற்கு வேசம் !

சனி, 3 ஏப்ரல், 2010

வெட்கப்படு



நில வென்பான்
முகத்தை….


குயிலென்பான்
குரலை….

முகிலென்பான்
இடையை….

என்ன தலை கவிழ்கிறாய் ?
வெட்கமா ?
தலை குனி

உன்னை
ஒரு முறையேனும்
ஆறறிவுள்ள
மனித இனத்தில்
சேர்த்தானா ?

வேட்கப்படு…
விழித்தெழு !

யதார்த்தம்


என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
சிறைவைக்க
நான் சராசரி அல்ல!

சுமையால் வேதனைச்
சுமப்பவர்களுக்குத்தான்..!

புரட்சி மொழிகள்..
யதார்த்தச் சிந்தனைகள்
பேச்சிற்கும், எழுத்திற்கும்
மட்டுமல்ல..!

வாழ்க்கைக்கும் தான்!

என் முகவரி



நெஞ்சு கனக்கும்
கசப்பான நிகழ்வுகளின்
தொகுப்புகள்…
கோரத்தாண்டவம் ஆடுகின்றன…

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
நினைவுகள்!
இரவு நேரங்களை..
இரணமாக்கிச் செல்கின்றன..?

இரட்டை வாழ்க்கை வாழ்வதாய்
மனசு கூறி..
மவுனித்துச் செல்கிறது..

கோரமான இரண்டு கால்
பிராணிகளின்
மத்தியில்
வாழ்க்கை நகர்த்துவது
விபரீதமாய் உள்ளது!

தந்தையிடம் தொலைத்த
முகவரியை….
கணவனுக்கு மாற்றிக் கொடுத்தார்கள்……
நானோ
நித்தமும்….
நிரந்தரமற்று அலைகிறேன்….!